வீரமாமுனிவரும் syncraticism ம் ஒரு குறிப்பு..
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
நேற்று திருச்சியிலிருந்து வந்து கொண்டிருந்தபோது பஸ்சில் அருகில்
இருந்தவர்,"சார் நீங்க மார்க்ஸ் தானே?" என்றார். அவர் குடவாசல் அருகில் உள்ள
மூலங்குடி எனும் ஊரில் உள்ள மாதா கோவிலின் பங்கு குரு. தான் திருச்சி சென் பால்சில்
குருத்துவம் பயின்று கொண்டிருந்த போது தங்களின் குருத்துவக் கல்லூரி விதித்த தடைகளை
மீறி வந்து நாங்கள் அப்போது நடத்திக் கொண்டிருந்த 'புலம் பெயர்ந்த தமிழர் மாநாட்டில்'
கலந்து கொண்டடதையும் அதில் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், கெய்ல் ஓம்வெத் போன்றோர் பங்கு பெற்றதையும்
நினைவு கூர்ந்தார்.
பேசிக் கொண்டிருந்தபோது வீரமாமுனிவர் எனப்படும் அருட்திரு கான்ஸ்டாண்டினோ
பெஸ்கி பற்றி உரையாடல் நகர்ந்தது
வீரமா முனிவர் (1680 -1742) தமிழ் உரைநடை (பரமார்த்த குரு கதை),
அகராதியியல் (சதுரகராதி), கிறி்தஸ்வ தமிழ் இலக்கியம் (தேம்பாவணி) முதலான துறைகளில்
ஆற்றி்யுள்ள பணிகளுக்கு அப்பால் தமிழகமெங்கும் பல கிறிஸ்தவ ஆலயங்களை அமைத்தவர். எனது
பாப்பாநாட்டிற்கு அருகில் உள்ள வீரக்குறிச்சி அந்தோணியார் ஆலயம் அவர் உருவாக்கியதுதான்.
அங்கு ஆலயத்திற்கு அருகில் உள்ள ஒரு ஆலமரம் அவர் பல்விளக்கிய பின் நட்டு வைத்த ஒரு
ஆலம் விழுதிலிருந்து வளர்ந்ததுதான் என்றொரு கதையும் அங்கு உண்டு. வைகாசி இறுதியில்
நடக்கும் அந்தோணியார் கோவில் திருவிழாவில் நடைபெறும் வாணவேடிக்கை அந்த வட்டாரத்திலேயே
பிரசித்தம்.
விருதாசலத்திலிருந்டு சுமார் 16 கிமீ தொலைவில் உள்ள கோனாங்குப்பம்
எனும் ஊரில் உள்ள 'பெரியநாயகி அம்மா' மாதா கோவிலைக் கட்டியதும் அவர்தான் என்றார் பேசிக்
கொண்டிருந்த ஃபாதர். அந்த ஆலயம் இப்போது மிகவும் புகழ் பெற்றதாக மாறிக் கொண்டிருக்கிறது
என நான் அறிவேன். ஆனால் அதுவும் வீரமாமுனிவரால் உருவாக்கப்பட்டதுதான் என அறியேன். அதோடு
அவர் கூடுதலாக இன்னொன்றையும் சொன்னார். அந்த ஆலயத்தில் மாதாவுக்கு (அன்னை மேரி) முதன்
முதலில் தமிழ் மரபுப்படி புடவை கட்டி விட்டதும் வீரமா முனிவர்தான் என்றார்.
எனக்கு அந்தச் செய்தி புதிதாக இருந்தது. ஆனால் வியப்பாக இல்லை.
ஏனெனில் கிறிஸ்தவம் இத்தகைய syncretism எனச் சொல்லத் தக்க செயல்பாடுகளுக்கு அப்படி
ஒன்றும் எதிரானதல்ல.
இப்படியாக உள்ளூர் கலாச்சாரத்துடன் இணைவதை அவர்கள் தங்களின்
மதம் பரப்பும் செயல்பாடுகளுக்குத் துணை புரியும் எனவும் நம்பினர். அருள்திரு ராபர்ட்
டி நொபிலி இதில் தீவிரமாக இருந்தவர். தலித் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் பெரிய அளவில்
கிறிஸ்தவத்திற்கு மாறுவதால் கிறிஸ்தவமே ஒரு தீண்டத் தகாத மதம் என ஆகிவிடக் கூடாது எனக்கூறி
அதிக அளவில் பார்ப்பனர் முதலான மேல் சாதியினரை மதம் மாற்ற வேண்டும் என்றவர் அவர். பார்ப்பன
குருமார்களை அய்யர் என அழைக்க வேண்டும் எனவும் கூறியவர் அவர்.
கிறிஸ்தவத்தில் இந்த பிறமதக் கலப்பு பெரிய தடைகளின்றி மேற்கொள்ளப்பட்டது;
அனுமதிக்கப்பட்டது. பாதிமார்கள் வேட்டி சட்டை அணிந்து கொள்ளல், கிறிஸ்துவிற்கும் தமிழ்
உடை அணிவித்தல். மத நிகழ்ச்சிகளை குத்து விளக்கேற்றித் தொடங்கி வைத்தல், வழிபாடுகளையும்,
பூசைகளையும் நல்ல தமிழில் ஆக்குதல் என்பதாகப் பல மட்டங்களில் இந்த syncretism அனுமதிக்கப்
பட்டது.
கலப்பு என்பது ஒரு வகையில் போற்றத் தக்கது தானே. அது பாசிசத்திற்கு
எதிரானது. பாசிசம் எப்போதும் தூய்மையைப் பேணுவது. கலப்பை அது அனுமதிப்பதே இல்லை. அந்த
வகையில் இந்த மாற்றங்கள் ஒரு வகை ஜனநாயகப் படுத்தலாகவும் orthodoxy க்கும் பாசிசத்திற்கும்
எதிரானதாகவும் இருந்தது. அந்த வகையில் வரவேற்கத்தக்கதாகவும் இருந்தது.
இப்படியெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கையில் பஸ் நின்று கூடப்
பயணித்த ஃபாதரும் விடை பெற்றுச் சென்றார்.
####
இன்று ஒரு வியப்பு. கோனாங்குப்பம் பெரியநாயகி மாதா கோவிலுக்குச்
செல்லும் வாய்ப்பு ஒன்று எனக்குக் கிட்டியது. முதலில் வர இயலாது எனச் சொல்லிய நான்,
நேற்றைய உரையாடல் நினைவுக்கு வர உடன் அந்தப் பயணத்தில் கலந்துகொள்ள ஒப்புக் கொண்டேன்.
அது நிறைய கால்நடைகள் வளர்ப்பவர்கள் வாழும் ஊராக இருந்தது. ஒருவேளை
கோனார்குப்பமாக இருந்ததுதான் கோனாங்குப்பமாக மாறியதோ தெரியவில்லை.
அழகான கோவில். பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஆலய வரலாறு
குறித்த நூல் ஏதும் அங்கு விற்பனைக்கு இல்லை. வீரமா முனிவரின் சிலை ஒன்றுதான் அந்த
ஆலயத்தை அவருடன் இணைத்துப் பார்க்க வைக்கும் ஒரே சான்று.
மற்றபடி அந்த ஆலய வளாகத்திற்குள் இருந்த மாதா சிலைகள் அனைத்தும்
புடவை அணிவிக்கப்பட்டு ஒளி வீசின.
அங்கு வேண்டுதல் செய்து வருவோரும் மாதாவுக்குப் புடவைகள் அணிவித்து
அழகு பார்த்தனர்.
#####
திரும்பி வரும்போது எனக்கு ஒரு ஒப்பீடு மனதிற்குள் ஓடியது.
இஸ்லாத்தில் இந்த syncretism அனுமதிக்கப படுவதில்லை. சுஃபியிசம்
ஊடாக இங்கு கலந்த உள்ளுர் கலச்சாரக் கூறுகள் எத்தனை கடுமையாக அங்கே இன்று எதிர் கொள்ளப்
படுகின்றன... ! சமீபத்திய ஷிர்க் ஒழிப்பு மாநாடுகள் இதற்கொரு சான்று இல்லையா?
####
இதை ஒட்டி
எனக்கு இன்னொன்றும் தோன்றியது. இஸ்லாத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் உள்ள இந்த வேறுபாடுதான்
கிறிஸ்தவத்திற்குள் சாதி ஊடுருவவும் இஸ்லாத்தில் ஒப்பீட்டளவில் அது சாத்தியமில்லாமல்
போனதற்கும் காரணமானது, இல்லையா.... ?தோழர் அ.மாக்ஸ்
சென்னை
No comments:
Post a Comment