Saturday, 10 September 2016

கோபம்" பற்றிய - துருப்பிடித்துப்போன வெட்டுக்கத்தி அல்லது வீச்சருவாள் ஒன்றன் வாக்குமூலம் ~

கோபம்" பற்றிய - துருப்பிடித்துப்போன வெட்டுக்கத்தி அல்லது வீச்சருவாள் ஒன்றன் வாக்குமூலம் ~
-------------------------------------------
மூக்குக்கு மேல் கோபம் வருவது எனக்கு வாடிக்கையாக இருந்தது ஒருகாலம்... "எல்லாம் ஒழுங்காக இருக்க வேண்டும்", என்று கோடிட்டு, அதன் மேல் அனைவரும் நடக்க வேண்டும் என்று அநியாயத்துக்குச் சண்டை பிடித்து வந்தேன்...
கொலரைக் கடித்தபடி "போக்கிரிப் பொங்கல்" நடனமாடும் விஜய் பாடலில் வருவது போல: "ஐயனாரு வெட்டுக் கத்தி" யாக இருந்த காலம் அது -
அதனால், சாதித்ததை விட சாதிக்காமல் போனதுதான் அதிகம்...
எடுத்த முயற்சிகள் எல்லாமே, (கொழுத்த ஊழலாளர்களின் எதிர்ப்பைச் சந்திக்க - அது தொடர்பாக எனக்கு வந்த கோபத்தில்) காற்றோடு கலைந்து போயின...
'அவர்களுக்கு' என்னைக் கோபப்படுத்துவது எப்படி என்று தெரிந்து போனது - சில இடங்களில் இலகுவாகத் தட்டினால், இவன் வெருண்டு கோபமுற்று - தாண்டவமாடி எல்லாவற்றையும் (நந்தவனத்து ஆண்டி போல) போட்டுடைப்பான் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்...
என்னிடம் எஞ்சியது வெறுமை மட்டுமே!
//"கெடுதி நாள்: மாசி 20, 2008
உனது உயிரைக் காப்பாற்றிக்கொள்"// ~ என்று துண்டெழுதியனுப்பி, ஓடவைத்துக்கூட இரசித்தனர் ‘அவர்கள்’...
யார் ‘அவர்கள்’?
என்னையும் உங்களையும் போன்ற சராசரி மனிதர்கள்தான் அவர்களும். சுயநலம் பேராசையாக மாறியதால் அவர்கள் கண்களுக்கு - பதவி, செல்வாக்கு, பணம் என்கின்ற மூன்று மட்டுமே தெரிந்தது.
பேராசை வெறியாக மாற அவர்கள் தம் முதுகெலும்புகளை கழற்றி வைத்து விட்டு வாழத் தொடங்கியிருந்தனர். 'சுயத்தை' தொலைத்த வெறுமையின் வெளிப்பாடு அவர்களின் கண்களில் தென்பட்டது.
நிர்வாகத்தொகுதியை தன் கொடும்பிடிக்குள் வைத்திருப்பதன் மூலம், முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டைகளாயிருந்து கொண்டு தம் பலத்த செல்வாக்குகளின் துணையால் பலரையும் அழித்தொழித்தனர் 'அவர்கள்'.
அவர்களைத் தனித்தனி ஆட்களாக அடையாளம் காட்டிச் சாடுவதால் இங்கு பயனொன்றுமில்லை.
காலம் காலமாக, வறட்டுச்சித்தாந்தங்களிலும், குழப்பவாதத்திலும், ஊழலிலும் ஊறிப்போன வடகிழக்குச் சமூகம் அவர்களை உருவாக்கியிருந்தது (இன்றும் உருவாக்கிக்கொண்டிருக்கின்றது).
அவர்களின் பார்வையில் நான் எதிரியானேன்!
"சமூகத்துக்கு ஒவ்வாதவன், இவன் வாழத்தெரியாதவன்" - என்று எள்ளி நகையாடினர் அவர்கள்...
இவ்வளவத்துக்கும், நான் செய்ய முயன்றது - சூழலியலில் முதுமானிப்பட்ட நெறி ஒன்றை விருத்தியாக்கவும், வடகிழக்கின் நிலம்சார் நீரியல்~உயிரியல் தொகுதிகளின் ஆய்வுகளை முன்னெடுக்கவும், விஞ்ஞான ஆய்வினை சமூக மட்டத்துக்குக் கொண்டு போக எத்தனித்ததும் (என்னால் இயன்ற அளவிற்கு) மட்டுமே! என் பேராசைதான்...
நான் பெரிய அறிவாளிக் கொம்பன் அல்ல - அது எனக்கு நன்றாகவே தெரியும், ஆனால் கழுதைத்தனமான விடாத பிடிவாதம் நிறையவே இருந்தது/இருக்கின்றது ~ அது மட்டும்தான் என் நம்பிக்கைக்குக் காரணம்... தொடர வைத்ததும்/வைப்பதுவும் அந்த நம்பிக்கையே....
ஆனாலும், எவ்வளவுதான் முயன்றும், முடிவு காண முடியவில்லை - கோபம் குறுக்கே நின்று அழித்தது...
முதிர்ச்சியற்ற முறையில், அவர்களைத் தனித் தனியாளாக அடையாளம் கண்டு (நானும் என்னாலியன்றளவு) - பதிலுக்குத் தாக்கத் தொடங்கினேன்...
தனிப்பட்டவர்களைத் தாக்குவதோ, திருத்த எத்தனிப்பதோ - தனிமனிதனாக என்னால் முடியாது. அது, இப்போது விளங்குகின்றது. ஆனால், அந்தத்தருணத்தில் - முடியாமல் போனதின் காழ்ப்புணர்வு, அவர்கள் மீது பெரும்கோபமாக வெடித்து நின்றது...
விஞ்ஞானம் எழுத வேண்டிய பேனா - வெறுப்புணர்வை உமிழ்ந்தது. இன்று, அதனை நினைத்து வெட்கித் தலைகுனிந்து நிற்கின்றேன்.
தாடி நரைத்த எனக்கு - 'இன்று' - பொறுமையின் நிதானம் விளங்குகின்றது...
பத்து வருடங்களுக்கு முன் இந்த 'அறிவு' இருந்திருந்தால் - நிறையவே வென்றிருக்கலாம் என்பது விளங்குகின்றது...
ஆனாலும், "கண்கெட்ட பின் சூரியநமஸ்காரம்" ~ பெரிய பயனொன்றும் இல்லை!
'அவர்களிடமும்' பல ஆற்றல்கள் இருந்தன. அதனை நான் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
எதனையும் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடிய சக்தி படைத்தவர்கள் அவர்கள். சமூக தொடர்பாடலிலும், செயற்குழுக்களை உருவாக்குவதிலும் மிகவும் உன்னதமான முகாமைத்துவத் திறன் அவர்களிடமிருந்தது. [‘They’ definitely had (and continue to have) very highly advanced skills for forming effective teams, networking, and operations management].
அவற்றை சிறந்ததொரு கல்வி நிர்வாகக் கட்டமைப்பை கட்டியெழுப்பப் பயன்படுத்தி இருக்கலாம்...
அது ஏன் 'அவர்களால்' முடியாது போனது?
அதற்கான சமூக/பொருளாதார/அரசியல் பின்னணிகள் யாவை?
அவற்றை எப்படிச் சீர்த்திருத்தம் செய்வது?
இந்தக் கேள்விகளுக்கு பதில் தேட நான் சமூகச்சீர்திருத்த வாதி அல்லவே... முயன்று தோற்றுப்போன வெகுசாதாரணமான ஒரு ஆய்வாளன்.
இன்று - (என்) அநியாயத் தவறுகளினால் ஏற்பட்ட பின்னடைவைப் பற்றி இரைமீட்க மட்டுமே என்னால் முடிகின்றது.
குழப்பவாத அரசியலாலும், ஊழல் குழறுபடிகளாலும் அவர்கள் அழித்தொழித்தவைகளை விடவும் - எனது கோபத்தால் என்னால் செயற்படுத்த முடியாமல் 'அழிய விடப்பட்டவைகள்' அதிகம்... அதை நான் வருத்தத்துடன் முழுமனதாக ஏற்றுக்கொள்கின்றேன்.
இப்போது சொல்லுங்கள் - இங்கு யார் குற்றவாளி? நானா அல்லது ‘அவர்களா’?
மெதடிஸ்த நெறியை பின்பற்றுபவர்கள் - மரணவீடுகளில் பாடும் பாடல் ஒன்று ஞாபகம் வருகின்றது:
"திவ்வியப் புல்வெளியில் நாம் மீண்டும் சந்திப்போம்".... (என்று பொருள்படும் பாடல்)
அந்தப் ‘புல்வெளியில்’ – (அனைவரும் தம் கணக்கை 'ஆக்கியவனிடம்' ஒப்புவிக்கும் தருணத்தில்), 'அவர்களை' மீண்டும் சந்திக்கக்கிட்டினால் - அங்கு என்னிடம் கோபமிருக்காது...
ஆனால், அவர்களிடம் (நிச்சயமாக) ஒன்று மட்டும் கேட்பேன்.
அஃதாவது,
"நாம் சாதித்ததாக நினைத்தது எல்லாம் சாதிக்கப்பட்டிருக்கின்றதா? அது மனத்துக்கு நிம்மதியைத் தந்திருக்கின்றதா?" என்று...
சில கேள்விகளுக்குப் பதில் தெரிந்தும் - 'தெரியாதது போல்' நம் சுயநலங்களுக்காக வாழ்கின்றோம், அதனால் சமூகத்தின் நலனுக்கெதிரான வழியில் பிறழ்கின்றோம்...
அது கடவுளுக்கு விரோதமானது.
நான் முன்கோபம் தவிர்த்து நிதானத்துடன் செயற்பட இன்னமும்தான் தட்டுத் தடுமாறி முயன்றுகொண்டிருக்கின்றேன். முயல்வேன்.
நம்பிக்கையுடன் முயல்வதைத் தவிர வேறென்ன செய்யமுடியும்?
இந்த உலகிற்கு என்னாலியன்ற ஒரு பங்களிப்பையாவது - சீருடன் செயற்படுத்துவதற்கான சந்தர்ப்பம் நிச்சயமாகக் கிட்டும் என்கின்ற நம்பிக்கையுடன் தொடர்ந்தும் நடக்கின்றேன்.

மனோபவன்
கனடா

No comments:

Post a Comment